Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை போட்டிக்கு 3 பேர் விண்ணப்பம்: திடீர் குழப்பத்தால் மீண்டும் கூடுகிறது மத்தியகுழு!

இலங்கை தமிழ அரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட இதுவரை 3 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 ஜனவரி 21ஆம் திகதியும், பொதுக்குழு 22ஆம் திகதியும் நடைபெறும். கட்சியின் தலைவர் தெரிவு 21ஆம் திகதி இடம்பெறும். அன்று தலைவர் தொடர்பான இணக்கம் ஏற்படாதவிடத்தில், 22ஆம் திகதி பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடைபெறும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் இதுவரை தலைவர் தெரிவுக்கான போட்டி நடைபெற்றதில்லை. போட்டியாளர்கள் புரிந்துணர்வுடன் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுப்பார்கள்.

எனினும், இம்முறை அப்படி நடப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றன.

கடந்த மாதம் வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கான திகதி, தலைவர் தெரிவு பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்த சூழலில், புதிய தலைவர் தெரிவுக்கான விண்ணப்பங்களை, கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் கோரியிருந்தார். நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டிருந்தார்.

யாழ்-கிளிநொச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முதலிலும், அதை தொடர்ந்து, யாழ்- கிளிநொச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதை தொடர்ந்து, கடந்த நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு, கல்குடா தொகுதிக்கிளை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனும் தலைவர் போட்டிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைமைக்கான விண்ணப்பங்களுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தலைமை பதவி தெரிவுக்காக விண்ணப்பம் சமர்ப்பித்து போட்டியிடும் முறை இதுவரை காணப்பட்டதில்லை, தற்போது நடைபெறுவது விதிமீறல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் திகதி குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல், தலைமை பதவிக்கான விண்ணப்பங்கள் கோரியது நடைமுறை தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2024 ஜனவரியில் தேசிய மாநாடு நடைபெறும் என மத்திய குழுவில் ஒரு யோசனையென்றளவில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இறுதித்தீர்மானமல்ல. கடந்த மத்தியகுழு கூட்டத்தில் கட்சியின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் தாயாரின் இறுதிச்சடங்கு நடந்ததால், அன்றைய கூட்டத்தில் கிழக்கு உறுப்பினர்கள் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்ட திகதி பற்றிய இறுதி முடிவு- உத்தியோகபூர்வ தீர்மானம் அடுத்த வாரமளவில், கட்சியின் மத்தியகுழு மீள கூடி தீர்மானிக்கவுள்ளது.

இதன்போது, தற்போது பதில் செயலாளர் கோரிய தலைவர் விண்ணப்பத்தின் செல்லுபடியாகும் தன்மை பற்றியும் விவாதிக்கப்படும்.

கட்சியின் மாநாட்டு திகதி பற்றிய உத்தியோகபூர்வ திகதியை உறுப்பினர்களுக்கு அறிவித்த பின்னரே, தலைவர் தெரிவு விண்ணப்பத்தை கோருமாறு கட்சி தலைமை பதில் செயலாளருக்கு அறிவித்திருந்தது. எனினும், மாநாட்டு திகதி பற்றி உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னரே தலைவர் தெரிவுக்கான விண்ணப்பங்களை செயலாளர் கோரியது, அடுத்த மத்தியகுழுவில் விவாதத்திற்குரியதாக இருக்கும்.

இதேவேளை, விண்ணப்பதாரிகளை பிரேரித்தது யார் என்பதும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மரபு மீறலாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்திலும் பதில் செயலாளர் நெருக்கடியை எதிர்கொள்வார்.

மாவை விண்ணப்பிக்கவில்லை

தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்காக இதுவரை மாவை சேனாதிராசா விண்ணப்பிக்கவில்லை. தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவில் இப்படியான போட்டி இதுவரை நிகழ்ந்த பாரம்பரியம் இல்லாத காரணத்தினால், இந்த புதிய போக்கில் தானும் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லையென அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, ஏதாவது திருப்பங்கள் நிகழ்ந்து, கட்சி தலைமையை குறுகிய காலத்துக்கு மாவையே வகிக்க வேண்டுமென இரா.சம்பந்தன் ஏதாவது முடிவுகள் எடுத்தால், அதை மாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அல்லாத பட்சத்தில், கட்சியின் பிறிதொரு பொறுப்புக்கு அவர் வருவார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகம் ஆரம்பத்தில் தலைவர் பதவியை வகித்து, பின்னர் அதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, செயலாளராகினார். பின்னால் வந்த தலைவர்களும் அப்படியே செயற்பட்டிருந்தனர். இதனால் மாவை சேனாதிராசாவும் செயலாளர் உள்ளிட்ட பிறிதொரு பதவிக்கு குறிவைக்கலாம்.

இதேவேளை, கட்சியின் மற்றொரு மரபு- தலைமை பதவியும், செயலாளர் பதவியும் வடக்கு கிழக்கிற்கு பகிர்ந்தளிப்பது. இதனால், தலைமை பதவிக்கு வடக்கிலுள்ளவர் தெரிவானால், செயலாளர் பதவி கிழக்கிலுள்ளவருக்கு செல்லும். மறுவளமாக, கிழக்கில் தலைமையேற்றால், வடக்கில் செயலாளர் நியமிக்கப்படுவார்.

அனேகமாக, முதலில் தலைவர் தெரிவே இடம்பெறும். இதில் சிறிதரன், சுமந்திரனில் ஒருவர் தெரிவானால், செயலாளர் கிழக்குக்கு செல்லும்.

செயலாளராக யோகேஸ்வரன்?

தலைமை பதவிக்கான விண்ணப்பத்தை சீ.யோகேஸ்வரன் சமர்ப்பித்திருந்தலும், அவர் இறுதிக்கட்ட போட்டியிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தமிழ்பக்கம் அறிகிறது. தலைமை பதவிக்கு யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள் என கிழக்கில் உருவாகும் பிரதேசவாத விமர்சனங்களை எதிர்கொள்ளவே அவர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.

எனினும், போட்டியின் போது அவர் விலகிக் கொள்ளவே வாய்ப்புண்டு. யோகேஸ்வரனை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிதரனையும் ஆதரிப்பவர்கள். யோகேஸ்வரன், சிறிதரன் இருவரும் போட்டியிடுவது, சுமந்திரனின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், யோகேஸ்வரன் தலைமை போட்டியிலிருந்து இறுதி நேரத்தில் விலகிக் கொள்வார்.

இதேவேளை, வடக்கிலிருந்து தலைவர் தெரிவாகினால், செயலாளராக சீ.யோகேஸ்வனின் பெயரே முன்மொழியப்பட அதிக வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.

இதையும் படியுங்கள்

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் நடக்காது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

Pagetamil

ஏப்ரல் 21 இன் முன் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் பலர் அம்பலமாவார்கள்: ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!