ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் பத்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகத்திற்குரிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுபுன் பத்திரகே முறைப்பாட்டாளரிடமோ அல்லது முகவர்களிடமோ இலஞ்சம் கேட்கவோ பெறவோ இல்லை எனவும், கடந்த 10ஆம் திகதி பிற்பகல் அவரது அலுவலகத்திற்குள் நுழைந்த விசாரணை அதிகாரிகள் மற்ற ஊழியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்வதாக, சட்டத்தரணி ஊடாக தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் முன்வைக்க முறைப்பாடு தவறியுள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காக அவரது மனைவி எதிர்வரும் 15ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், அந்த உண்மைகளை கருத்திற்கொண்டு எந்தவொரு நிபந்தனையிலும் தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றில் மேலும் கோரியிருந்தார்.
எண்ணெய் கைத்தொழில் தொடர்பான வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக கோரிய வேளையில், இந்த மூன்று சந்தேக நபர்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.