வடமராட்சி அல்வாய் பகுதியில் அண்மையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதன் முடிவுகளே தற்போது வெளியாகியுள்ளன.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வாய் கிழக்கு பகுதியில் வசித்து வந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (89) என்பவரே கடந்த ஒக்ரோபர் 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மூதாட்டி திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார். அவரது சகோதரியின் மகன் ஒருவர் கனடாவில் வசிக்கிறார். அவரே மூதாட்டியின் பராமரிப்பு செலவை கவனித்து வருகிறார்.
மூதாட்டி தனித்து வாழ்ந்து வந்த வீடு அமைந்துள்ள வளவுக்குள் மற்றொரு வீடும் அமைந்துள்ளது. அங்கு இளம் குடும்பமொன்று வசித்து வருகிறது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மாகாணசபை உறுப்பினராக அங்கம் வகித்த அகிலதாஸின் மகள், இரண்டாவது திருமணம் செய்து, அந்த வீட்டில் வசிக்கிறார்.
கனடாவில் உள்ள அந்த மூதாட்டியின் மகன், அந்த குடும்பத்திற்கு பணம் அனுப்பியே பராமரித்து வந்துள்ளார். மூதாட்டியை பராமரிக்க பெண்ணொருவர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி மூதாட்டிக்கு உணவு கொண்டு சென்றபோது, மூதாட்டி அசைவற்றிருந்ததாக அந்த வளவில் தங்கியிருந்த குடும்பத்தினர் தகவலளித்துள்ளனர். பொலிசார் தகவலளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற அவசர நோயாளர் காவு வண்டியினர், மூதாட்டி உயிரிழந்ததை உறுதி செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து கிராமசேவகர் ஊடாக சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், மூதாட்டி படுத்திருந்த மெத்தை உள்ளிட்ட பொருட்களை வீட்டிலிருந்தவர்கள் எரித்திருந்தனர். பொலிசாரும் ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளவில்லை.
பிரேத பரிசோதனையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே பொலிசாரின் கவனம் இந்த விவகாரத்தில் சென்றது. உடல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முடிவின்படி, மூதாட்டியின் மரணம் கொலைச்சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.