தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் கூட்டு தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதன் பின்னணியில்தான் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் தபால் திணைக்களத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் திணைக்களம் நேற்று இரவு அறிவித்தது.
ஆனால், இந்த உத்தரவுகளையெல்லாம் புறக்கணித்து தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதனை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான எந்தவொரு தபால் நிலையமும் மூடப்படாது என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்தின் கொள்கையின்படி பயனுள்ள முதலீட்டு வாய்ப்புக்காக நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்கான இணக்கம் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
நுவரெலியா தபால் நிலையத்தை நடத்துவதற்கு பொருத்தமான கட்டிடமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.