இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு இன்று (06) பிற்பகல் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை எனவும், புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் மூலம் ஜனாதிபதி இதனை அறிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க ஜனாதிபதி பல தடவைகள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான திரன் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் ஆரம்பமானதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.