யாழ்ப்பாணம். நெடுந்தீவில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் ஊடகங்களில் தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குடும்பத்தினராலும், மருத்துவத்துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் 31ஆம் திகதி இரவு நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குணாராசா தனுஷன் (25) என்பவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து அன்று அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலை வரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், பரிசோதனை முடிவுக்கு மாறாக போலியான தகவல் ஊடகங்களில் வெளியானது.
குறிப்பிட்ட இளைஞன் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருந்தார். எனினும், ஐஸ் போதை பாவனையால் அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் போலிச் செய்தி வெளியாகியிருந்தது.
இளைஞனின் சிறுநீர் மாதிரிகளை சோதனையிட்ட போது, அவர் போதைப்பொருள் பாவிப்பதாக முடிவு காண்பித்துள்ளது. என்றாலும், அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.