வருடாந்தம் 4,000 புதிய மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் ஆலோசகர் புற்றுநோயியல் நிபுணர் டொக்டர் நுராத் ஜோசப் தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக, மார்பக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான டிராஸ்டுஜுமாப் உள்ளிட்ட மருந்துகள் போதுமான அளவு மருத்துவமனைகளில் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், இந்த புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும் என்றும், முன்கூட்டியே கண்டறிவதால் மார்பகங்களை அகற்றுவதை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் மார்பக புற்றுநோயாளிகளில் 90 வீதமானவர்கள் குணமடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள ‘சுவனாரி’ கிளினிக்குகளில் கலந்துகொள்வதன் மூலம் இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் எனவும் தெரிவித்தார்.
ஒரு பெண் 20 வயதுக்கு மேல் இருக்கும்போது மார்பகங்களை சுயபரிசோதனை செய்வது அவசியம் என்றும், 40 வயதைத் தாண்டியவுடன் மேமோகிராஃபிக்கு செல்ல வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர் வலியுறுத்தினார். ஒரு கட்டி இருப்பது, அசாதாரண வடிவத்தில் மாற்றம், முலைக்காம்பிலிருந்து நிறமற்ற சுரப்பு வெளியேறுதல், அறிகுறிகள் என்றும் அவர் கூறினார்.