கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு சீரியல் நடிகை நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது. இந்தநிலையில், நடிகை பிரியாவும் உயிரிழந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் வழக்கமான கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டுள்ளார். எனினும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டது. குழந்தை தற்போது வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சக சீரியல் நடிகர் கிஷோர் சத்யா இந்த துயரமான செய்தியை பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில், “மலையாளத் தொலைக்காட்சித் துறையில் மேலும் ஒரு எதிர்பாராத மரணம். டாக்டர் பிரியா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். இறக்கும்போது அவர் 8 மாத கர்ப்பிணி. அவரின் தற்போது குழந்தை ஐசியூவில் உள்ளது. வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே பதிவில், “ஒரே மகளின் இறப்பை ஏற்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கும் தாய். 6 மாதங்களாக எங்கும் செல்லாமல் பிரியாவுடன் இருந்தே அவரின் கணவர் நன்னாவின் சொல்ல முடியாத வலி. இப்படி, பிரியாவை பார்க்க மருத்துவமனைக்குச் செல்லும்போது துயரக் காட்சிகள். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும். விசுவாசிகளான அந்த அப்பாவி மனங்களுக்கு கடவுள் ஏன் இவ்வளவு பெரிய கொடுமைகளை கொடுக்கிறார்?.
மனம் திரும்பத் திரும்ப கேள்விகளை எழுப்புகிறது… அதுவும் விடை தெரியாத கேள்விகள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ரஞ்சுஷா மேனனின் மரணம் என்ற அதிர்ச்சிச் செய்தி மறையும் முன், இப்போது பிரியாவின் மரணம். 35 வயது நிரம்பிய ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது மனம் அதை ஏற்றுக்கொள்ள அனுமதிக்க மறுக்கிறது. இந்த சரிவில் இருந்து பிரியாவின் கணவரும் அம்மாவும் எப்படி மீண்டு வருவார்கள் எனத் தெரியவில்லை. அவர்களின் மனதுக்கு அதற்கான சக்தி கிடைக்கட்டும்” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த நடிகை பிரியா மலையாள தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட நபராகவும், ‘கருத்தமுத்து’ என்கிற படத்தில் நடித்தன் பிரபலமானவர். ஆனால், அதையும் தாண்டி அவர் ஒரு மருத்துவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை கைவிட்ட பிரியா, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே மருத்துவ மேற்படிப்பையும் மேற்கொண்டுவந்துள்ளார். அவரின் இறப்பு மலையாள தொலைக்காட்சித் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.