வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதியுடன் கூடிய பௌத்த விகாரைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான உத்தரவை தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் பதில் வாதங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியா வடக்கில் அமைந்துள்ள வடுனாகல ரஜமகா விகாரைக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கல்கமுவ சங்கபோதி தேரர் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அவகாசம் வழங்கப்பட்டது.
ஏ.எஸ்.துரைராஜா, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்றக் குழுவினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே நீதிமன்றில் முன்னிலையாகி, பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனைகள் தொடர்பான பதில் வாதங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார்.
அதன்படி, அடுத்த ஆண்டு மே 25ஆம் திகதி மனுவை மீள விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அன்றைய திகதிக்கு முன் பதில் வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சமீபத்தில் சிலர் தங்கள் விகாரைக்குள் புகுந்து சிவலிங்கத்தை வைத்து அதன் சொத்துக்களை சேதப்படுத்தியதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதனால், தொல்லியல் மதிப்புள்ள விகாரையின் மரியாதையும், புனிதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பை வழங்குமாறும், வட மாகாணத்தில் தொல்பொருள் பெறுமதி கொண்ட பௌத்த விகாரைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறும் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.