கேரளாவின், களமச்சேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று (29) ஞாயிறு காலை சுமார் 9:30 மணியளவில் யெகோவாவின் சாட்சிகள் மாநாடு நடைபெற்ற சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார், 23 பேர் காயமடைந்தனர்.
ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஒக்டோபர் 27ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் மாநாட்டின் கடைசி நாள் இன்று.
மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர், முதலில் வெடிச்சத்தம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறினார். மண்டபத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் இருந்தனர். தொழில்நுட்பக் கோளாறா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் வெடிவிபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். காயமடைந்தவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
களமச்சேரியில் வெடிவிபத்தை தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவ கல்வித்துறை இயக்குனர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் உடனடியாகத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களமசேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் பணியாளர்களின் சேவையும் வழங்கப்படும். மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளிலும் வசதிகளை ஏற்படுத்த அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.