மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு உட்பட்ட 21 இந்து ஆலயங்களை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் குஷிகா குமாரசிறி உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா, அம்பேவெல வத்த, பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ரகுநாதன் (வயது 43) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் திருடப்பட்ட தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த இருவரையும் தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக, அந்த ஆலயங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காட்சிகள் மூலம் விசாரணைகளை மேற்கொண்ட நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பிரதான சந்தேக நபரைக் கைது செய்தனர்.
பிரதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடப்புஸ்ஸல்லாவ, வெலிமடை, கப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட 21 இந்து ஆலயங்களுக்குள் சந்தேகநபர் அத்துமீறி நுழைந்துள்ளதுடன், உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.