இலங்கையர்கள் பலர் சிறு குழந்தைகளின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் விற்பனை செய்வதாக சிறுவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பு ஒன்று செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் இன்று (24) அறிவித்தது.
சர்வதேச அமைப்பு முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், வட்ஸ்அப் குழுவில் அங்கம் வகிக்கும் பல இலங்கையர்கள் மற்றும் சிறு குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகிக்கும் பல இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் மகளிர் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வாட்ஸ்அப் குரூப் மூலம் இரண்டு முதல் ஏழு வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள், பாலியல் செயல்பாடுகள், ஆபாச காட்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் ரூ.1000/=, 2000/= மற்றும் 3000/=க்கு விற்கப்படுவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிகளில் இலங்கைச் சிறுவர்களும், சந்தேகநபர்களும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை செய்வதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உரிய கோரிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், விசாரணைகளை நடத்தி உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பணியகத்துக்கு உத்தரவிட்டது.