ஹொரணையில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (19) இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு சம்பவம் இடம்பெற்று மூன்று மணித்தியாலங்களின் பின்னர் ஹொரண பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
உணவகத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளின்படி, யுவதியொருவர் பானம் வாங்கிக் கொண்டு மேஜையில் அமர்ந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது. அப்போது ஒரு ஆணும் பெண்ணும் திடீரென அந்த இடத்திற்கு வந்து யுவதியை வலுக்கட்டாயமாக உணவகத்திலிருந்து வெளியே கடத்திச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் உணவக ஊழியர்கள் உடனடியாக பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து, ஹொரண பொலிஸார் தேடுதல் நடவடிக்கைக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவரின் கைப்பையைக் கண்டறிந்து அதன் ஊடாக அவரது தாயைத் தொடர்புகொள்வதில் வெற்றியீட்டியுள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வழங்கிய தகவலில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகள் காதல் விவகாரத்தை முடித்துக்கொண்டதாகவும், தொடர்பை முறித்துக் கொண்ட காலத்திலிருந்து பண்டாரகமத்தைச் சேர்ந்த முன்னாள் காதலனால் அவர் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளானதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு முன்னாள் காதலனால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் வழங்கப்படுவதால், யுவதி தனது சொந்த பாதுகாப்பிற்காக பண்டாரகமவில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
யுவதியை கடத்திய சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட ஹொரண பொலிஸார், முன்னாள் காதலரின் வீட்டைக் கண்டுபிடித்ததுடன், உணவகத்தில் இருந்து கடத்தல் இடம்பெற்று மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னர் பண்டாரகம – அங்குருவாதோட்டை வீதியிலுள்ள ஒரு குடியிருப்பில் யுவதியை மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
யவதியை கடத்திச் சென்ற முன்னாள் காதலர், மற்றுமொரு பெண் மற்றும் முன்னாள் காதலருக்கு கடத்தலுக்கு உதவிய ஜோதிடர் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஹொரண நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.