தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்த கதவடைப்பு காரணமாக வடக்கு, கிழக்கிலுள்ள பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன.
பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூர் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறந்து, வழக்கம் போல வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரச அலுவலகங்கள், பாடசாலைகள் வழக்கம் போல இயங்குகின்றன. பாடசாலைகளில் மாணவர் வரவு வழக்கம் போல காணப்பட்டது.
வடக்கின் பாடசாலைகளில் 80 வீதத்துக்கும் அதிகமான மாணவர் வரவு பதிவாகியுள்ளது.
இன்றைய கதவடைப்பினால் பிரதான நகரங்களில் உள்ள வர்த்தகர்களும், தனியார் போக்குவரத்துதறையினரும் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கதவடைப்பிற்கு அழைப்பு விடுத்த கட்சிகளின் செயற்திறனின்மை காரணமாக முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகரத்தின் வர்த்தக செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
பாடசாலைகள் வழக்கம் போல செயற்படுகிறது. அரச அலுவலகங்கள், அத்தியாவசிய சேவைகள் செயற்படுவதால், மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் குறைந்தளவிலேனும் உள்ளது.
திரையரங்குகளில் படக்காட்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி சந்தை மூடப்பட்டிருந்ததால் ஒரு பகுதி வர்த்தகர்கள், சந்தைக்கு வெளியில் தமது விவசாய பொருட்களை விற்பனை செய்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.
அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.
முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது.
சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கியது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல செயற்பட்டன. தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இயங்கின. அரச பேருந்துகள் வழக்கம் போல செயற்பட்டன.
நகருக்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் வழக்கம் போல வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றது.
வவனியா, மன்னார்
இரண்டு மாவட்டங்களின் பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வவுனியாவில் ஒமந்தை, புளியங்குளம், கனகராயன் குளம் பகுதிகளில் பாதிக்கதவுகள் திறந்து வர்த்தக நிலையங்கள் இயங்கின. குறுந்தூர தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
மன்னாரிலும், இதே நிலவரம்தான் காணப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூரில் வழக்கம் போல வர்த்தக நிலையங்கள் செயற்படுகின்றன. தனியார் பேருந்து சேவை இடம்பெறவில்லை.
வாழைச்சேனை, படுவான்கரை கல்வி வலயங்களில் மாணவர் வரவு மிகக்குறைவாக இருந்ததால் தவணைப்பரீட்சைகள் நடைபெறவில்லை. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 80 வீத மாணவர் வரவு பதிவாகியுள்ளது. அங்கு பரீட்சைகள் நடக்கிறது. பட்டிருப்பு கல்வி வலயத்தில் 45 வீத மாணவர் வரவு பதிவாகியுள்ளது.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் கதவடைப்பு தகவலே எட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படும் விதமான காட்சிகளே பதிவாகியுள்ளன. அம்பாறையில் எந்த பிரதேசத்திலும் கதவடைப்பு இடம்பெறவில்லை. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பாண்டிருப்பு, பெரிய நீலாவணை பகுதிகளில் கூட கதவடைப்பு கண்டுகொள்ளப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் கதவடைப்பை தீர்மானித்த கட்சித் தலைவர்கள் யாருக்கும், கிழக்குக்கு செல்ல உடம்பு ஒத்துக்கொள்ளாததால், அந்த பகுதி மக்கள் சரியான பதில் வழங்கியுள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் கதவடைப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை. நகரம் வழக்கம் போல செயற்படுகிறது. நகருக்கு வெளியில் உள்ள தமிழ் பகுதிகளும் வழக்கம் போல செயற்பட்டு வருகிறது.