இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா, சபாநாயகர் நியமித்த குழுவின் மூலம் மக்களுக்கு உண்மையைக் காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பான காணொளியை பார்ப்பதன் மூலம் உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுடன் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சரிடம் அதனை நிறுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு தான் கூறியதாக சுஜித் சஞ்சய் பெரேரா குறிப்பிட்டார்.
அவ்வேளையில் தம்மை கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்திய டயானா கமகே, வார்தை மோதலை தடுக்கும் முயற்சியை தாக்குதலாக அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ததாகவும், அந்த இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உண்மைகளை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்தார்.
சபாநாயகர் எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.