கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தின் நிதி விவகாரங்களை, கல்முனை தெற்கு (முஸ்லிம்) பிரதேச செயலகத்தில் ஆராய முடியாது என, இன்று (19) தமிழ் மக்கள் திரண்டு வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கல்முனையில், தற்போது தமிழ் பிரதேச செயலகம் ஒன்று இயங்குவதற்கே பெரும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் அதிகாரத்திலுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இயங்க வைக்க பல்வேறு முயற்சிகள், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தற்போது கல்முனை தெற்கு (முஸ்லிம்) பிரதேச செயலகத்தின் முழுமையான நிர்வாகத்தின் கீழ்- எந்த எதிர்ப்புமின்றி செயற்படுகிறது என காண்பிப்பதற்கான ஒரு நகர்வு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் மக்கள் மத்தியில் பரவியிருந்தது.
அம்பாறை அரச அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இன்று கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் விசேட கணக்காய்வு கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு விவகாரங்கள் பற்றி, கணக்காளரால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் கணக்காய்வு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரம் வேண்டி நிற்கையில், அந்த பிரதேச செயலகத்தின் கணக்கறிக்கைகள் தொடர்பான கூட்டத்தை, கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் நடத்துவது உள்நோக்கமுடையது என பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் திரண்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் அதிசயராஜை, தெற்கு பிரதேச செயலகத்துக்கு அழைத்து செல்ல, மாவட்ட அரசாங்க அதிபர் வந்தபோது, அவரை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை, கல்முனை தெற்குக்கு அழைத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
தமிழ் பிரதேச செயலக விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இந்த கூட்டத்தை உதாரணமாக காண்பித்து, கல்முனை தெற்கு நிர்வாகத்தின் கீழ் வடக்கு நிர்வாகம் சுமுகமாக செயற்படுகிறது என காண்பிக்கவே இந்த சூழ்ச்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினர்.
பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, அரசாங்க அதிபர் இவற்றுக்கு தன்னால் முடிந்த தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து சென்றதும் மக்களும் கலைந்து சென்றனர்.