ஒன்றரை வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் குடும்பத்தினரால் தாக்கப்பட்டு, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
63 வயதான இந்த சந்தேக நபர் நேற்று இரவு லுனுகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காலை, சந்தேக நபரின் மனைவி தெஹிகஹவத்தை- கொட்டல்பெத்தவில் வசிக்கும் தனது மகனின் வீட்டிற்கு வந்து, மதியம் வீடு திரும்பும் போது, தனது ஒன்றரை வயது பேத்தியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு, மாலையில், சிறுமியை தனது கணவர்- தாத்தாவுடன் வீட்டில் நிறுத்தி விட்டு விறகு வெட்ட தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது சிறுமியின் தந்தை தனது மகளை அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தன் தந்தையால் (சிறுமியின் தாத்தா) தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதைக் கண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தந்தையை அடித்து உதைத்து சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இரண்டு நாட்களின் பின்னர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை லுனுகல பொலிஸாருக்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேக நபர் தனது மகனால் தாக்கப்பட்டதாக கூறி லுனுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடிருந்தார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வயோதிபர் பதுளை வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 8 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.