சீன- ரஷ்யாவுக்கிடையில் “அரசியல் பரஸ்பர நம்பிக்கை தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது” என்று சீன தலைவர் ஜி ஜின்பிங் புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச நியாயம்” மற்றும் “நீதியைப் பாதுகாக்க” சீனா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார், அவர்களின் இரு நாடுகளுக்கும் இடையிலான “நெருக்கமான மற்றும் பயனுள்ள மூலோபாய ஒருங்கிணைப்பை” பாராட்டினர் என சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்தது.
“இருதரப்பு வர்த்தக அளவு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது, இது இரு தரப்பும் நிர்ணயித்த 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது” என்று ஜி மேலும் கூறினார்.
“கடந்த 10 ஆண்டுகளில் 42 முறை புடினை சந்தித்ததாகவும் நல்ல பணி உறவையும் ஆழமான நட்பையும் வளர்த்துக் கொண்டதாகவும்” சீனத் தலைவர் குறிப்பிட்டார்.
பெய்ஜிங் இந்த வாரம் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்ட மாநாட்டை நடத்துகிறது. இதில், 130 நாடுகளின் பிரதிநிதிகs் கலந்து கொள்கின்றனர்.
விருந்தினர் பட்டியலில் முதலிடத்தில் புடின் இருக்கிறார். உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவை சர்வதேசரீதியாக தனிமைப்படுத்த மேற்கு நாடுகள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு பெரிய உலகளாவிய சக்திக்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சீனா ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது, நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் கடந்த ஆண்டு 190 பில்லியன் டொலர்களை எட்டியது.
பெய்ஜிங், மொஸ்கோவின் படையெடுப்பை விமர்சிக்க மறுத்து விட்டது. மேற்கு நாடுகள் தலையிடாமல் விட்டாலே, உக்ரைன் போரில் சமரசம் ஏற்படும் என்ற நிலைப்பாட்டையுடையது.
புடின் தனது கம்யூனிஸ்ட் அண்டை நாடுகளுடன் ஏற்கனவே வலுவான பிணைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.