கடந்த வாரம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் வெடித்து தொடரும் நிலையில், ஹமாஸ் போராளிகள் முதல் முறையாக இஸ்ரேல் பெண் பிணைக் கைதி ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ ஹமாஸ்களின் அரபிக் டெலிகிராம் சனலில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் 21 வயதான மியா ஷெம் பேசுகிறார்.
“நான் ஷோஹமைச் சேர்ந்த மியா ஷெம். நான் இப்போது காசாவில் இருக்கிறேன். சனிக்கிழமை காலையில் நான் ஸ்டெரோட்டில் இருந்து திரும்பினேன். நான் ஒரு விருந்தில் இருந்தேன். எனது கையில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக இங்குள்ள (காசா) மருத்துவமனையில் எனக்கு 3 மணிநேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இங்குள்ளவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள், மருந்துகள் வழங்குகிறார்கள், எல்லாம் நலமாகவே இருக்கிறது. நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள். சீக்கிரமாக என்னை இங்கிருந்து விடுவியுங்கள்” என்று உள்ளூர் மொழியில் பேசியிருக்கிறார்.
ஒக்டோபர் 7, 2023 அன்று கிப்புட்ஸ் ரெய்ம் அருகே ஒரு இசை விழாவில், மியா ஷெம் கலந்து கொண்டிருந்தார். அங்கு ஹமாஸினால் பிடிக்கப்பட்டார். மியா ஷெம் இஸ்ரேல்- பிரான்ஸ் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்.
Hamas releases footage showing its fighters providing medical care to a female prisoner in Gaza.#Hamas #IsraelTerrorists #IsraelGazaWar #PalestineGenocidePeople pic.twitter.com/tei9jcV7L5
— 🇵🇸بن آل عمران (@Dr_AZzam99) October 16, 2023
ஹமாஸ் வீடியோ பற்றி இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது ருவிட்டரில், ஹமாஸ் தனது வீடியோவில் தன்னை ஒரு மனிதாபிமான குழுவாக அடையாளப்படுத்த முயற்சித்துள்ளது. இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக் கைதிகள் அனைவரும் விருந்தினர்களாக நடத்தப்படுவார்கள். காலம் கனியும்போது விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் ஒரு மோசமான தீவிரவாத அமைப்பு. இஸ்ரேலின் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள்,வயதானவர்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களைக் கடத்தியது, கொலை செய்ததற்கு ஹமாஸே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
“இது இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸின் உளவியல் பயங்கரவாதம். இதுபோன்ற வீடியோக்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த வீடியோவில், ஹமாஸ் தன்னை ஒரு மனிதாபிமான அமைப்பாகக் காட்டிக் கொள்ள முயல்கிறது, அதே நேரத்தில் அது ஒரு கொலைகார பயங்கரவாதக் குழுவாக உள்ளது,.
ஒரு பார்ட்டிக்கு நடனமாடச் சென்ற 21 வயதுப் பெண், காஸாவின் மையப்பகுதியில் ஒரு கொலைகாரக் குழுவால் கடத்தப்பட்டது எப்படி?” என்று கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் Rear Adm. Daniel Hagari கூறுகிறார்.
முன்னதாக கடந்த ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 199 இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டினர் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின 75 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளில் அதிக மக்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.