தெனியாய நாதாகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியென்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட இருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
பெவரலிய, நாதாகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தெனியாய, ஒலகந்த, தெனியாய தோட்டத்தில் வசிக்கும் கந்தசாமி சந்திரா (வயது 47) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்புலன்ஸ் மூலம் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரின் சாரதி மற்றும் காயமடைந்த மற்றைய இரு பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெனியாய நதாகல வீதி மிகவும் குறுகலான மற்றும் செங்குத்தான வீதியாக காணப்படுவதாகவும், விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.