பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்பேது, மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக பாலஸ்தீனிய வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூமியில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக காசா சொல்லப்படுவதுண்டு. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுமார் 362 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ள காசா நிலப்பரப்பில் நெரிசலில் வசிக்கின்றனர்.
பாரம்பரிய பாலஸ்தீனிய மக்களின் வாழிடத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து, பாலஸ்தீனிய மக்களை, குறுகிய நிலத்தில் அடைத்து, முற்றுகையிட்டுள்ளது.
இதனிடையேதான், காசாவின் நெரிசலான இடங்களை குறிவைத்து வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காசாவில் உள்ள அல்-கராமா பகுதியில் இந்த குண்டுவீசப்பட்டுள்ளது.
Israeli warplanes and artillery use internationally #prohibited_white_phosphorus, destroying #Al_Karama neighborhood in the northwest of Gaza City with a continuous series of airstrikes. There are casualties and wounded, while ambulances and civil defense vehicles are unable to… pic.twitter.com/ym7zfKqIBH
— State of Palestine – MFA 🇵🇸🇵🇸 (@pmofa) October 10, 2023
வெள்ளை பொஸ்பரஸ் குண்டு என்பது வெள்ளை நிறம் மற்றும் சில நேரங்களில் அது வெளிர் மஞ்சள் நிறமாக எரியும். இவை பூண்டின் வாசனையைப் பரப்பும் மெழுகுப் பொருள். அது, ஒட்சிசனுடன் தொடர்பு கொண்டவுடன் எரியத் தொடங்குகிறது. இந்த குண்டுகள் வெடித்த பிறகு, உடனடியாக வெப்பநிலை 800 டிகிரியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.
வெட்டவெளியில் பொஸ்பரஸ் குண்டு வீசப்படும்பட்சத்தில், அது நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவும். வெடித்துச் சிதறும்போது மிக அடர்த்தியான வெண் புகை மண்டலத்தை உருவாக்கும். இதனால் தாக்குதல் நடத்தும் படைகளுக்கு தற்காப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வெள்ளை பொஸ்பரஸ் தரையில் வேகமாக படர்ந்து விரைவாக தீயை ஏற்படுத்தும். இந்த வகை குண்டுகளை ஆள்நடமாட்டம் இல்லாத வெட்டவெளி பகுதிகளில் பயன்படுத்த மட்டுமே இராணுவச் சட்டங்கள் அனுமதிக்கிறது. பொதுமக்கள் மத்தியில் உள்ள இராணுவ இலக்குகளிற்கு எதிராக கூட பயன்படுத்த முடியாது.
ஆனால், பாலஸ்தீனியர்கள் மீது சாதாரண மனிதாபிமான சட்டங்களை கூட கடைப்பிடிக்காத இஸ்ரேல், எப்படி பொஸ்பரஸ் தடையை கண்டுகொள்ளுமென எதிர்பார்க்க முடியும்?
இந்த குண்டுகள் மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய், குறிப்பாக இரத்தப் புற்றுநோய் ஏற்படலாம். மேலும், மனிதர்கள் சிலசமயங்களில் இறப்பை தழுவுவது மட்டுமல்ல, தீ தோலில் சிறிதளவு விழுந்தாலும் திசு மற்றும் எலும்பில் ஆழமாக ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துவதுடன் உறுப்புகளை சிதைக்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்களில் பொஸ்பரஸ் பயன்பாடு: 1800 களில் ஃபெனியன் என அழைக்கப்படும் ஐரிஷ் படைகள் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை அப்போது “ஃபெனியன் தீ” என்றும் கூறியுள்ளனர். இரண்டு உலகப் போர்களிலும் பிரிட்டிஷ் இராணுவம் இதைப் பயன்படுத்தியது. ஈராக் படையெடுப்பின்போது பல்லூஜா நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இந்த வகையான குண்டுகளை உபயோகித்துள்ளது.
இஸ்ரேல் இப்போது மட்டுமல்ல, 2006 லெபனான் போரின் போது ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிராக பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டது. மேலும், 2008-09 காசா போரின்போதும் வெள்ளை பொஸ்பரஸை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக பல மனித உரிமைகள் குழுக்கள் குற்றம்சுமத்தி இருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இவ்வகை குண்டுகளை ஒருமுறை பயன்படுத்தியுள்ளனர். சிரிய போரிலும் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கை போரிலும், இராணுவம் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.