ஹமாஸ் போராளிகளால் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தப்பட்ட காசா பகுதிக்கு அண்மையிலுள்ள தெற்கு இஸ்ரேல் நகரங்களில் வசிக்கும் மக்களை பொலிசார் வெளியேற்றினர்.
அந்த பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள ஹமாஸ் போராளிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் போராளிகள் ஊடுருவி 2 நாட்கள் ஆன போதும், தொடர்ந்தும் மோதல்கள் நடந்து வருகிறது.
சனிக்கிழமை எல்லை வேலியை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. சுமார் 130 பேர் அளவில் காசா பகுதிகளிற்கு கொண்டு செல்லப்பட்டு பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நேற்றும் ஸ்டெரோட் மற்றும் பிற நகரங்களுக்கு அருகில் நாள் முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. .
“இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலில் உள்ள ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கொல்லும் வரை ஒவ்வொரு சமூகத்தையும் நாங்கள் சென்றடைவோம்” என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுததாரிகள் இன்னும் இருப்பதாகக் கூறிய ஹகாரி, “நாங்கள் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தி, பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்” என்று கூறினார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், தெற்கில் சண்டை நடந்து வருவதாகக் கூறியது, அதே நேரத்தில் சில விவரங்களைத் தெரிவித்தது.
படைகள் “காசா எல்லைக்கு அருகிலுள்ள நகரங்களில் தொடர்ந்து போர்களை நடத்தி வருகின்றன, மேலும் கடந்த 40 மணி நேரத்தில் எல்லை மற்றும் கடற்கரையோரங்களில் நகரங்களில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்றது” என்று கூறியது.
“துருப்புக்கள் தெற்கு முழுவதும், குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி, தெற்கு குடியிருப்பாளர்கள் மற்றும் [பிற] இஸ்ரேலியர்களின் உடல்களைப் பாதுகாப்பதில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று அது மேலும் கூறியது.
எவ்வாறாயினும், இஸ்ரேலுக்குள் எத்தனை ஆயுததாரிகள் உள்ளனர், எத்தனை பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தீவிர மோதல்கள் எதுவும் இல்லை என்றாலும், சுமார் 13 பகுதிகளில் வசிப்பவர்கள் ஹமாஸ் ஆயுததாரிகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இராணுவம் இன்னும் அறிவிக்காததால், அவர்களது வீடுகளில் தங்கும்படி உத்தரவிடப்பட்டது.
ஞாயிறு அதிகாலையில் Sderot காவல் நிலையம், Kibbutz Be’eri மற்றும் Ofakim இல் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர் அல்லது ஹமாஸ் ஆயுததாரிகளும், பணயக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.
ஆனால் சிறுசிறு தனிநபர் துப்பாக்கிச் சண்டைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஊடுருவல்கள் நாள் முழுவதும் தொடர்ந்தன. இரண்டு பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில், ஹமாஸ் ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்பட்டு இஸ்ரேலிய பொதுமக்கள் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Sderot இல், சந்தேகத்திற்கிடமான ஊடுருவல் உட்பட இரண்டு தனித்தனி பாதுகாப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டனர். கிப்புட்ஸ் மெஃபல்சிமில் வசிப்பவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் வீடுகளில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.
காசா எல்லைக்கு அருகாமையில் உள்ள மாகெனில் இஸ்ரேலிய துருப்புக்களுக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் முன்னரே பதிவாகியிருந்தன.
ஹீப்ரு மொழி ஊடகங்களின்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அப்பகுதியில் ஆயுததாரிகளுக்கு எதிராக டாங்கிகளைப் பயன்படுத்தியது.
முன்னதாக, இராணுவ செய்தித் தொடர்பாளர் ஹகாரி, “வரவிருக்கும் 24 மணி நேரத்திற்கு காசாவைச் சுற்றியுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் வெளியேற்றுவதே இராணுவத்தின் முக்கிய பணி” என்று கூறினார்.
ஆனால், பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, சரியான “பிரதேசத்தை ஸ்கான் செய்த பின்னரே” வெளியேற்றத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.
காசா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் மட்டுமே தற்போது வெளியேற்றப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
“சூழலின் மதிப்பீட்டின் படி மேலும் வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்படும்” என்று இராணுவம் கூறியது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளுடன் சாத்தியமான மோதலை எதிர்பார்த்து வடக்கு கலிலி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து நேற்று பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எதிர்பார்க்கப்படும் பரந்த பதிலடி நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகி வருவதால், பிற சமூகங்களும் அகதிகளை அழைத்து வருவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.
சனிக்கிழமை அதிகாலை ஹமாஸின் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்த்பட்டது. காசா எல்லையில் இருந்து 15 மைல் (24 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நகரங்கள் மற்றும் சிறிய சமூகங்கள் உட்பட தெற்கு இஸ்ரேலின் 22 இடங்களில் ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.