எல்பிட்டிய, பிடுவல பிரதேசத்தில் நபர் ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இருவரை எல்பிட்டிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, 10 ரவைகள், 3 கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு போலி இலக்கத் தகடுகள் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றையவர் இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் நபர் ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய எல்பிட்டிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வீட்டின் அருகே சுற்றித் திரிந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இராணுவத்தில் இருக்கும் சந்தேகநபர் கடமை விடுமுறையில் இருந்து வந்து இந்தக் குற்றத்தைச் செய்ய வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபர்கள் வேறொரு பிரதேசத்தில் மற்றுமொரு கொலைக்கு முயற்சித்து அதனைச் செய்யத் தவறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைத் திட்டம் வெளிநாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எல்பிட்டிய தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.