நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி கொக், ஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஒரே போட்டியில் மூன்று சதமடித்த அணி மற்றும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்தது என வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது தென்னாபிரிக்கா.
இலங்கை அணிக்கு எதிராக பெறப்பட்ட அதிகபட்ச ஒருநாள் ஓட்டங்களும் இதுதான்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்காவின் இன்னிங்க்ஸை குயின்டன் டி கொக், தெம்பா பவுமா இணை தொடங்கியது. இதில் டில்ஷான் மதுஷங்க வீசிய இரண்டாவது ஓவரில் தெம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டானார்.
அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென், குயிட்டன் டி கொக்குடன் கைகோர்க்க இருவரும் இலங்கையின் பந்துவீச்சை விளாசித்தள்ளினர். கிட்டதட்ட 30 ஓவர்கள் வரை அடித்து துவம்சம் செய்த இந்த இணையை 31 வது ஓவரில் மதீஷ பத்திரன பிரித்தார். இதில் 84 பந்துகளில் 100 ரன்களை குவித்த டி கொக் அவுட்டாகி வெளியேறினார்.
110 பந்துகளில் 108 ரன்களை குவித்து அதிரடி காட்டிய ரஸ்ஸி வான் டெரின் விக்கெட்டை துனித் வெல்லலகே கைப்பற்ற 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்கா 291 ரன்களை குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் அவுட்டானாலும், ஐடன் மார்க்ராம் 3 சிக்சர்களை விளாசி நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவர் விக்கெட்டை டில்ஷான் மதுஷங்க கைப்பற்ற 106 ரன்களுடன் கிளம்பினார்.
தென்னாபிரிக்கா வீரர்கள் இலங்கையை விடுவதாக இல்லை. 49 வது ஓவரில் டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி வான வேடிக்கை காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி 438 ரன்களை குவித்தது. டேவிட் மில்லர் 39 ரன்களுடனும், மார்கோ ஜோன்சன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் டில்ஷான் மதுஷங்க 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன 95/1, துனித் வெல்லலகே 81/1, கசுன் ராஜித 90/1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 417 ரன்கள் எடுத்தது உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தென்னாபிரிக்கா முறியடித்துள்ளது. மேலும் ஐடன் மார்க்ராம் 49 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அதிவேக சதமடித்த சாதனையை படைத்துள்ளார். மேலும் உலகக் கோப்பை ஆட்டத்தில் ஒரு அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 7.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசல் மென்டிஸ் 28 பந்துகளில் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.