முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக பொய் சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸைக் கைது செய்து பணி இடைநிறுத்தம் செய்ததன் மூலம் அவரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த அடிப்படை உரிமைகளை மீறியதற்காக மூன்று மாதங்களுக்குள் மனுதாரருக்கு அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரருக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பள உயர்வு, படிகள், பதவி உயர்வுகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் கருப்பொருளின் படி பொலிஸ் திணைக்களம் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர் துரைராஜா, இந்த சம்பவத்தில் பிரதிவாதிகள் நடந்துகொண்ட விதம் மிகவும் குறைபாடுடையது என சுட்டிக்காட்டினார்.
அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் சுதந்திரமாக பணியாற்றுவதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய நீதியரசர் துரைராஜா, காவல் துறையும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்றார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குறிப்பிடப்பட்டுள்ளது.