முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மனஅழுத்தம் மற்றும் உயிரச்சுறுத்தல் காரணமாக பதவியை துறப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
செப்ரெம்பர் 28 ஆம் திகதி மாலை சரவணராஜாவின் கடிதம் ஊடகங்களில் வெளியான சமயத்தில், அவர் வேறொரு நாட்டில் இருந்தார்.
சரவணராஜா விவகாரம் நாட்டின் சட்ட ஆட்சி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளதால் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பொதுப்பாதுகாப்பு அமைச்சர், நீதியமைச்சர் ஆகியோர் இது பற்றிய விசாரணை நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். .
சரவணராஜாவின் வெளியேற்றம் புத்தரின் தண்டனை என சில அரைவேக்காடுகள் சிங்களத்தில் கவிதையெழுதி மகிழ்ந்துள்ளன. இப்போதைய நிலைமையில், சரவணராஜா வெளியேற்றம், அரச தரப்பிற்கே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தான் வழங்கிய தீர்ப்புக்காக நாட்டை விட்டு ஒரு நீதிபதி வெளியேறுவது மிகப் பயங்கரமான நிலைமை. நாட்டின் சட்ட ஆட்சியையே கேள்விக்குட்படுத்தும் விடயம்.
வழங்கிய தீர்ப்பொன்றை மாற்றமாறு சட்டமா அதிபர் அச்சுறுத்துவது ஆகப் பயங்கரமான நிலைமை. நீதித்துறை செயற்பாட்டையே தலைகீழாக்குவது.
தனது பதவிவிலகலுக்கு இதுதான் காரணம் என சரவணராஜா கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் மனஅழுத்தத்தை முதலாவதாகவும், உயிரச்சுறுத்தலை இரண்டாவதாகம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமொன்றுள்ளது.
தான் வழங்கிய தீர்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதாக… தன்னை சட்டமா அதிபர் அச்சுறுத்தியதக நீதிபதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. நீதிபதி பொறுப்பை துறந்து, இலங்கையே வேண்டாம் என வெளியேறும் ஒருவர்… இலங்கைக்கு வெளியில் சென்ற பின் மிகப் பாதுகாப்பான நிலைமையில் தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பிய ஒருவர்… சட்டமா அதிபர் தன்னை அச்சுறுத்தினார் என்பதை ஏன் கடிதத்தில் குறிப்பிடவில்லையென்பது கவனத்தை ஈர்க்கும் கேள்வி.
“சரவணராஜாவை செப்ரெம்பர் 21ஆம் திகதி சட்டமா அதிபர் அழைத்தார். வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்தார் என நீதிபதி தெரிவித்தார்“ என ஒரு செய்தி வெளியாகியிருந்தது. நீதிபதி சரவணராஜா எந்த செய்தியாளரிடம் இதை சொன்னார், உண்மையில் அப்படி சொல்லியிருந்தாரா என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமுமில்லை. சரவணராஜா அப்படி சொன்னார் என ஒருவர் பகிர, அதுவே சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணமாகி விட்டது.
சரவணராஜா கனடா அல்லது ஐரோப்பா குடியுரிமை பெற இப்படியொரு காரணத்தை கூறினார் என்பது அடிப்படையறிவும் அல்லாதவர்களின் வாதம். சரவணராஜா போன்ற ஒருவர் இலங்கையிலிருந்து வெளியேற எந்த பொருளாதார, அந்தஸ்து காரணங்களும் இருக்க முடியாது.
மாவட்ட நீதிபதியொருவர் சம்பளம், மேலதிக கொடுப்பனவுகள் என மாதாந்தம் ரூ.4 இலட்சம் ரூபாவிற்கு மேல் பெறுகிறார். அவருக்கு பாதுகாப்பு, சமூக அந்தஸ்து என்பன மேலதிக அனுகூலங்கள். அவரது மனைவி கொழும்பில் பணிபுரியும் சட்டத்தரணி. பெரும்பாலும் சட்டத்தரணிகள், நீதிபதிகளை விட அதிக மாத வருமானம் பெறுபவர்கள். இந்த தம்பதி கனடா அல்லது ஐரோப்பிய நாடொன்றில் சம்பாதிப்பதை இலங்கையிலேயே சம்பாதிப்பார்கள்.
அவர்கள் கனடா அல்லது ஐரோப்பாவிற்கு மிக சாதாரணமாக சுற்றுலா விசா பெற்று சென்று வரலாம்.
இந்த பத்தியில், சரவணராஜாவின் வெளியேற்றத்துக்கான காரணமென செய்திகளில் குறிப்பிட்ட காரணத்தை பற்றிய கேள்வியை எழுப்புவது சரவணராஜா மீதான அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதல்ல. அவர் வெளிநாட்டு குடியுரிமை பெறுவதற்காக வெளியேறினார், அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதம் எப்படி வெளியானது… யார் அதை வெளியிட்டார்கள் என தேவையற்ற ஆணி பிடுங்கும் பேஸ்புக் நேசமணிகள் எழுப்பும் தேவையற்ற வகை சந்தேகமல்ல.
மாறாக, சரவணராஜாவிற்கு இருக்கும் உண்மையான அச்சுறுத்தலை… பிரச்சினையை வெளிப்படுத்துவது. ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாத சில்லறைதனமான காரணங்களை குறிப்பிட்டு, பின்னர் மறுவாரமே அரச தரப்பு அதை சுக்குநூறாக உடைத்து, சரவணராஜா தனிப்பட்ட விவகாரத்தினால் வௌியேறினார் என கதையை முடிக்க வாய்ப்பேற்படுத்தாமல், பலமான தரப்பாக சரவணராஜா தரப்பை முன்னிறுத்துவது அனைத்து தமிழர்களின் கூட்டுப் பொறுப்பு என்பதை வலியுறுத்துவதற்கே.
சரவணராஜா வெளியேற்ற விவகாரத்தில், தீர்ப்பை மாற்றுமாறு அவர் சட்டமா அதிபரால் அச்சுறுத்தப்பட்டார் என ஒரு செய்தியாளர் எழுதியதுதான், இப்பொழுது காரணமாக கூறப்படுகிறது. உண்மையில் சரவணராஜா அதை கூறினாரா என்ற சந்தேகம் ஏற்படும் இடம் இதுதான்.
ஏனெனில், சட்டமா அதிபரை சந்திக்க நேரம் கேட்டு சந்தித்தவர் சரவணராஜா. அவர் மீதான 2 வழக்குகளில், அவர் சார்பில் ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனான வழக்கு தயாரிப்பு பற்றிய கலந்துரையாடல்களுக்காக அந்த சந்திப்பு ஏற்பாடானது.
இலங்கை நீதித்துறை மீதான தமிழ் மக்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சந்தேகமேயின்றி நானும் நம்புகிறேன். ஆனால், அந்த சந்தேகமென்பது கண்மூடித்தனமானதாக இருக்க முடியாது. இருக்கின்ற கட்டமைப்பிற்குள் நூதனமாக செயற்பட்டு, காரியமாற்றும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக, சட்ட கட்டமைப்பையே தலைகீழாக்கி செயற்படுமென்பது சிறுபிள்ளைத்தனமானது.
தீர்ப்பை மாற்றுமாறு சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என சரவணராஜா குறிப்பிட்டிருக்க மாட்டார் என ஏற்கெனவே குறிப்பிட்டது எதனால் என்றால், ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை அவரே விரும்பினாலும், அல்லது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி விரும்பினாலும் மாற்ற முடியாது. இது அடிப்படை சட்ட அறிவுள்ள எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
அந்த தீர்ப்பை மாற்ற வேண்டுமெனில் மேன்முறையீடு செய்ய வேண்டும். தீர்ப்பை வழக்கிய நீதிபதி திருத்தி- மாற்றி எழுத முடியாது.
குருந்தூர்மலை விவகாரத்தில், சரவணராஜா அளித்த தீர்ப்புக்கு எதிராக குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்த பிக்குகள் தரப்பும், தொல்லியல் திணைக்களமும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டன.
குருந்தூர் மலை விவகாரத்தில் சரவணராஜா அளித்த தீர்ப்பு உண்மையில் அரச தரப்பை கடுமையாக அசௌகரியப்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதற்காக, சரவணராஜாவை அழைத்து தீர்ப்பை மாற்றுங்கள் என அச்சுறுத்தினார்கள் என்பது எந்த அடிப்படையுமற்றது. அனேகமாக சட்டத்துறை பற்றிய அறிவில்லாத செய்தியாளர் ஒருவர் அந்த செய்தியை தயாரித்திருக்க வேண்டும்.
குருந்தூர் மலை விவகாரத்தில் ஓகஸ்ட் 31ஆம் திகதி சரவணராஜா தீர்ப்பளித்தார். செப்ரெம்பர் 21ஆம் திகதி சட்டமா அதிபர் அழைத்து மிரட்டினார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அழைத்து மிரட்டினார் என்றால் கூட ஓரளவு நியாயம் உள்ளது. அப்படியென்றால் கூட, ஒரு நீதிபதியை தீர்ப்பு தொடர்பாக சட்டமா அதிபர் அப்படி அழைக்க முடியாது. அழைப்பதுமில்லை. நீதிபதிகளை கையாள்வது நீதிச்சேவைகள் ஆணைக்குழு.
குருந்தூர் மலை தீர்ப்பளிப்பதற்கு முன்னதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிலிருந்து யாராவது அச்சுறுத்தினார்களா என்பது நமக்கு தெரியாது. எதையுமே சரவணராஜா சொல்லவில்லை.
இதேவேளை, சரவணராஜாவின் வழக்கு விவகாரமாக சட்டமா அதிபர் அழைத்து பேசும்போது, “ஏனப்பா இவங்களோட சும்மா மல்லுக்கட்டுறீர்.. என்னை பார்க்கவில்லையா… பார்த்து சூதானமாக செயற்படும்“ என்ற தோரணையில் நட்புரீதியாக ஏதாவது அறிவுரை கூறினாரா என தெரியவில்லை. அதற்கான எல்லா வாய்ப்பும் உள்ளது.
சரவணராஜாவிற்கு இன்னும் சில வாரங்களில் இடமாற்றம் வரவிருந்தது. குருந்தூர்மலை தீர்புக்கு தண்டனையான இடமாற்றத்தை அவர் அனுபவித்திருக்கக்கூடும்.
ஆக, குருந்தூர் மலை விவகாரத்தில் சரவணராஜாவை அச்சுறுத்தாமலேயே கமுக்கமாக காரியங்களை முடிக்க அரசுக்கு எல்லா வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது.
நான் நினைக்கிறேன், சரவணராஜாவுக்கு நன்மை செய்கிறேன் என நினைத்து, ஒரு செய்தியாளர், இடையிடையே மானே தேனே போடுவதை போல, சட்டமா அதிபர் அழைத்து மிரட்டினார் என எழுதப் போய், சரவணராஜா தரப்பை பலவீனப்படுத்த காரணமாகி விட்டார்.
ஏனெனில், அடுத்தடுத்த வாரத்தில் அரச தரப்பு இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவமளித்து விளக்கமளிக்கும். அப்போது, சரவணராஜா தரப்பு நியாயத்தை சுலபமாக நொறுக்கும் வாய்ப்பை நாம் வழங்கக்கூடாது என்பதாலேயே இதை குறிப்பிட்டேன்.
குடும்ப விவகாரமும்… மனஅழுத்தம்
சரவணராஜா நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், மனஅழுத்தத்தை முதலாவது காரணமாக குறிப்பிட்டுள்ளார். விடயமறிந்த சட்டத்துறை சார்ந்தவர்கள் இந்த காரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
சரவணராஜா வெளியேற்றத்துக்கு தூண்டிய பிரதான காரணமாக மனஅழுத்தமே இருக்கலாமென நீதித்துறை வட்டாரத்தில் பரவலான நம்பிக்கையுள்ளது. இதில், அவர் மீதான அச்சுறுத்தலும் பங்களித்துள்ளது என்றே கருதலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில், நீதிபதி சரவணராஜாவை மோசமாக விமர்சித்து ஆற்றிய உரை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். நீதிபதியின் குடும்ப விவகாரங்களை பற்றி நாடாளுமன்றத்தில் பேசி அவரை சங்கடப்படுத்தினார். சரவணராஜா வெளியேற்றத்துக்கு பங்களித்த முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்று.
சரவணராஜா 3 விதமான அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
1.ஒருவரின் குடும்ப விவகாரங்களை பகிரங்கமாக எழுதுவது ஏற்புடையதல்ல. ஆனால், நாளையோ, நாளை மறுநாளோ இது சிங்கள ஊடகங்களாலும், அரச தரப்பாலும் பகிரங்கமாக பேசப்படும் என்பது நிச்சயமென்பதால், மேலோட்டமாக குறிப்பிடுகிறேன். சரவணராஜா குடும்பத்தில் அன்பான, சுமுகமான நிலைமை தற்போது நீடிக்கிறது என்றாலும், சில மாதங்களின் முன்னர் வரை அப்படி நிலைமையல்ல. தம்பதியினர் இருவராலும், ஒருவர் மீது ஒருவர் நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சரவணராஜா மீது மனைவி தொடர்ந்த 2 வழக்குகள் இருந்தன. இப்பொழுது அவையனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டன. குடும்ப விவகார அழுத்தங்களினால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
2.முல்லைத்தீவு, மாங்குளம் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரியது. பரந்த பிரதேசத்தில் அதிக வழக்குகள் வரும் இந்த நீதிமன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைவு. இந்த நீதிமன்றங்களுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளே இரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். நீதிபதி மதியம் சாப்பிடவும் நேரமின்றி பணியாற்ற வேண்டும், ஆளணி பற்றாக்குறையால் நீதிமன்ற ஆவணங்களை உடனடியாக பெற முடியாது என்கிறார்கள்.
3.குடும்ப விவகாரங்களினால் மனஅழுத்தம், பணிச்சுமையுடன், குருந்துர்மலை விவகார அச்சுறுத்தல்கள், சரத் வீரசேகரவின் நாடாளுமன்ற பேச்சுக்கள் என அனைத்தும் சேர, சரவணராஜா இந்த முடிவெடுத்திருக்கக்கூடும்.
குருந்தூர்மலையுடன் தொடர்புடைய பிக்குகள். அந்த பகுதி சிங்களவர்கள், அல்லது யாராவது சிங்களவர்கள் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து அவரை மிரட்டியிருப்பார்கள் என்பது நிச்சயம். “உன்னை என்ன செய்கிறேன் பார்… கொல்லாமல் விடமட்டேன்“ என்றுகூட மிரட்டியிருப்பார்கள்.
மன, பணி அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், அடிக்கடி வந்த தொலைபேசி மிரட்டல்களால், உண்மையிலேயே நான் கொல்லப்பட்டு விடக்கூடும் என நம்பியிருக்கலாம். அந்த சூழலை கையாள முடியாமல் போயிருக்கக்கூடும்.
சரவணராஜா வெளியேற்ற காரணமென வெளியான செய்தியில், புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. இப்படி பார்த்தால் வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தமிழனும் அல்லவா வெளியேற வேண்டும். பின்தொடரும் புலனாய்வாளர்கள், தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்ய உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிக்கு இருந்தது. அவர் அப்படி உத்தரவிட்டு, அதை செய்யாமல் விட்டிருந்தாலே அது பாரதூரமான விவகாரம்.
சரவணராஜா அதற்கும் முயற்சிக்கவில்லை. மன, பணி அழுத்தங்கள் அவரை எவ்வளவு அழுத்தியுள்ளது என்பதற்கு இதுவும் உதாரணம்.
தொலைபேசியில் அடையாளம் தெரியாவர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களை சாதாரணமாக சமாளிக்கலாம் என வெளிப்பார்வைக்கு தோன்றும். ஆனால் மனஅழுத்தமுள்ள ஒருவரால் அதை சமாளித்திருக்க முடியுமென கூற முடியாது. மனஅழுத்தத்தின் விளைவாக மனிதர்கள் எவ்வளவு வித்தியாசமான, விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை நாம் கண்முன்பாக பார்க்கிறோம். நீதிபதி சரவணராஜா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
-பீஷ்மர்-