யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலையொன்றின் அதிபர், அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வலயக்கல்விப் பணிமனையில் இணைக்கப்பட்டுள்ளார்.
கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள அதிபருடன், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒரு பகுதியினர் மோதல் போக்கை கடைப்பிடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
நல்லாட்சிக்காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் பாடசாலை மதில் அமைப்பதற்காக ரூ.20 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலும் ரூ.5 இலட்சம் தேவைப்பட்ட நிலையில், பாடசாலை பழைய மாணவர் சங்கத்திடம் கடன்பெற்று கட்டுமான பணிகள் முடிவடைந்திருந்தன.
பழைய மாணவர் சங்கத்தின் கடனுடன் தொடர்புடைய கணக்கு பதிவு குறிப்பொன்று காரணமாக, கணக்காய்வு திணைக்கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வலயக்கல்வி பணிமனையில் இணைக்கப்பட்டுள்ளார்.
பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிபர், கடந்த 2017ஆம் ஆண்டில் பதவியேற்ற போது, கடுமையான சர்ச்சையேற்பட்டது. பிறிதொரு அதிபரை பதவியேற்க வைக்க பழைய மாணவர் சங்கத்தின் ஒரு பிரிவு விரும்பியது. அப்போதைய வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனின் தலையீட்டில், அதிபர் பதவியேற்றிருந்தார்.
தற்போது, அதிபர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு தரப்பின் நடவடிக்கையே காரணமென குறிப்பிடப்படுகிறது.
கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படும். அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற 1 வருடமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.