குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொடூரமாக வெட்டிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை ஓட்டமாவடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டுமாவடி முதலாம் பிரிவு அல்முக்தார் வீதியில் குறித்த கணவன் மனைவி வாழ்ந்து வந்துள்ள நிலையில் சம்பவ தினமான இன்று பகல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குளியலறைக்கு சென்ற மனைவியின் கழுத்து மற்றும் கைகளை கூரிய ஆயுதத்தால் கணவன் வெட்டியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.
இதனையடுத்து அயலவர்கள் வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்ணை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்னர் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.