பொரளை, கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் வைத்து யுவதி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ராஜசூரிய முன்னிலையில் நேற்று (25) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் பொரளை பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில், நேற்று (25) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் முறைப்பாட்டாளரால், தன்னை தாக்கிய மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண முடிந்தது.
சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியில் பணியாளர்கள் குழு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது.
குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் குறித்த பெண் தாக்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததை பொலிசார் பின்னர் கண்டுபிடித்தனர்.
இவர் இதற்கு முன்னர் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.