அமெரிக்காவில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தாமதித்து வருகிறது.
யு.எஸ்் எயிட், ஜனநாயகத்துக்கான தேசிய நிறுவனம் என்பன இணைந்து தற்போதைய பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களின் தலைவர்களை அமெரிக்காவுக்கு 10 நாள் செயலமர்விற்காக அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளன.
ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த செயலமர்வு 31ஆம் திகதி முடிவடைகிறது.
அமெரிக்க ஆய்வுப் பயணத்தில் பங்கேற்க விசா வழங்குவதற்குத் தேவையான பாதுகாப்பு அனுமதி அறிக்கைகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும், அதனால் தனது பெயரை மாற்றி வேறு ஒருவரை பெயரிட ஏற்பாட்டாளர்கள் முயற்சிக்கிறார்கள் என வீரசேகர குமுறியுள்ளார்.
ஆய்வுப் பயணத்திற்கு வேறு பெயரைப் பரிந்துரைக்குமாறு அமெரிக்கத் தூதரகம் நாடாளுமன்ற செயலகத்திற்குத் தெரிவித்தமை உத்தியோகபூர்வமாகத் தெரியுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (25) கடிதம் ஒன்றை அனுப்பியதாக வீரசேகர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒருவரைத் தவிர, மற்றவர்களை வித்தியாசமாக நடத்துவதற்கு அனுசரணையாளருக்கு உரிமை இல்லை என்றும், கடற்படையில் இருந்தபோது, அவர் பல்வேறு படிப்புகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்றும் வீரசேகர கூறினார்.
தன்னிடம் 5 வருட காலத்திற்கு செல்லுபடியாகும் B2 அமெரிக்க விசா உள்ளதாகவும், B1 விசா தேவையென தனக்கு சொல்லப்பட்டுள்ளதாக வீரசேகர தெரிவித்தார்.
அமெரிக்கா செல்லும் ஆசையில் தான் விண்ணபிக்கவில்லையென்றும், விசா வழங்குவதில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முழு உரிமை இருந்தாலும், ஒரு நபரை பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்து தூதரகத்திடம் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக விசாரிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சபாநாயகருக்குத் தெரிவித்துள்ளதாக வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் இழைத்ததாக குறிப்பிட்டு ஜெனரல் சவேந்திர சில்வா, சகி கல்லகேவுக்கும் அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் வீரசேகரவும் இணைக்கப்பட்டாரா அல்லது அண்மையில் அவர் வெளிப்படுத்தும் இனவெறிப் பேச்சுக்களிற்காக தடை செய்யப்பட்டாரா என்பது இதுவரை தெரியவரவில்லை.