தியாகி திலீபனின் 36வது நினைவு நிகழ்வு இன்று (26) தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. இன்று நல்லூரடியில் பெருந்திரளானவர்கள் ஒன்றுகூடி, திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து,இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குள் நுழைந்தது. இந்தியா ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக கையெழுத்திட்ட போதும், தமிழர் தரப்பின் கோரிக்கைகளையும், உரிமைகளையும் பெற்றுத்தருவதற்கு பதிலாக, இலங்கையை சமரசம் செய்வதிலேயே கவனம் செலுத்தி வந்தது.
இந்த பின்னணியில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் திலீபன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஒப்பந்த விதிகளின்படி, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தனர். அதன்பின்னர் திலீபன் அகிம்சை வழியில் பட்டினிப் போர் நடத்தினார்.
என்றாலும், இந்தியா அதை கண்டுகொள்ளவில்லை. நல்லூர் முன்றலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வேண்டுதல்கள் பலிக்காமல், திலீபன் செப்ரெம்பர் 26ஆம் திகதி காலை உயிர்நீத்தார்.
திலீனை நினைவுகூர இன்று நல்லூரில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடினர். கொட்டும் மழையின் மத்தியிலும், மக்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1987 திலீபன் மரணத்தின் பின்னர் ஒப்ரோபர் 5ஆம் திகதி குமரப்பா- புலேந்திரன் உள்ளிட்ட தளபதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், சயனைட் உட்கொண்டு வீரமரணமடைந்திருந்தனர். இந்தியாவின் மத்தியஸ்தத்திலான உடன்படிக்கை ஏமாற்றுவித்தையென்பதை காலம் உணர்த்திய நிலையில், ஒக்ரோபர் 10ஆம் திகதி இந்திய- புலிகள் போர் வெடித்தது. இந்திய படைகள் அவமானகரமான தோல்வியுடன் 1990 இல் இலங்கையை விட்டு வெளியேறின.













