திருக்குவளை அருகே காய்ந்த குறுவை நெற்பயிர்கள் நேற்று டிராக்டர் மூலம் அழிக்கப்படுவதைப் பார்த்து மனமுடைந்த விவசாயி நெஞ்சுவலியால் வயலிலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரைச் சேர்ந்தவர் எம்.கே.ராஜ்குமார்(47), இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால், சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்புக்காக காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழிக்கும் பணி நேற்று நடந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாருக்கு ரூபாவதி(40) என்ற மனைவியும், 13 வயதில் மகனும் உள்ளனர். உயிரிழந்த ராஜ்குமாரின் உடலுக்கு காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் உள்ளிட்ட விவசாயிகள் நெற்கதிர்களால் ஆன மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தனபாலன் கூறியது: ராஜ்குமாரைபோல ஆயிரக்கணக்கான விவசாயிகள், காய்ந்த பயிர்களைப் பார்த்து, மன வேதனையில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறுவை பயிர்களுக்கு உரிய நீரை விடுவித்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.