கொலை வழக்கில் சந்தேக நபரான அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (25) 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியான குற்றம் சாட்டப்பட்டவரின் கீழ் பணிபுரியும் அதிகாரி மீது செல்வாக்கு செலுத்துவது மிகவும் பாரதூரமான விடயம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய செல்வாக்கை செலுத்த எதிர்பார்க்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையுமென தெரிவித்தார்.
இரத்தினபுரி மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது இந்தக் குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சந்தேக நபரான பிரேமலால் ஜயசேகர என்றழைக்கப்படும் “சொக்க மல்லி”யை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததாக சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தார்.