வடமராட்சி, துன்னாலை பிரதேசத்தில் இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர் குழுக்கள் மோதலில் ஈடுபடுவதுடன், பொதுமக்களை தாக்கி, வீடுகளுக்கு சேதம் விளைவித்து வருவதால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லியடி பொலிசார் இந்த மோதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென்றும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
துன்னாலை ஆட்டுபட்டி கொலனி, சின்னக்குடவத்தை பகுதிகளை சேர்ந்த ரௌடிக்குழுக்களே அண்மை நாட்களாக மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டு தரப்பினரும் வாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதும், மறு தரப்பு கிராமத்துக்குள் புகுந்து ஆட்களை வெட்டுவது, வீடுகளை சேதமாக்குவதென தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று நெல்லியடி பொலிசார் அந்த பகுதிக்கு சென்றிருந்த போது, சின்னக்குடவத்தை பகுதியை சேர்ந்த ரௌடிக்குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் ரௌடிக்குழு வந்தது. ஒரு இளைஞன் தலைக்கு மேலாக வாளை சுழற்றிக் கொண்டு வந்தார்.
பொலிசாரை கண்டதும், மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடினர். வாளை சுழற்றிக் கொண்டு வந்த ரௌடியை பொலிசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
சின்னக்குடவத்தையை சேர்ந்த 21 வயதான ரௌடியே கைது செய்யப்பட்டவர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாணையில் ஆட்டுபட் கொலனியில் வீடுகள் உடைத்தது, வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவங்களில் தொடர்புபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை ஒக்ரோபர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த குழு மோதலை கட்டுப்படுத்த நெல்லியடி பொலிசார் போதுமான நடவடிக்கையெடுக்கவில்லையென பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மோதல் சம்பவம் பற்றி பொலிசாருக்கு அறிவித்தால், அவர்கள் வந்து ரௌடிகளை கலைத்து விட்டு செல்கிறார்களே தவிர, ரௌடிகளின் கொட்டத்தை அடக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கின்றனர்.