முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா என்னை அழைத்து மேசையில் பணக்கட்டுகள் நிரப்பிய சூட்கேசை வைத்து, எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் என தெரிவித்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் அண்மையில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
நான் விரைவில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளேன். அரசியல் வாழ்க்கையில் நான் சொன்னதாக ஒரு பொய், நான் செய்த அநியாயம், யாரிடம் கொள்ளையடித்தேன், யாரிடம் பணம் வாங்கினேன் என ஒன்றை யாராவது ஒரு அரசியல் தலைவரால் சுட்டிக்காட்ட முடியுமா?. ஆனால் இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் ஒவ்வொருவரை பற்றியும் சொல்ல முடியும்.
சம்பந்தர் கட்சியை கிளப்பிக் கொண்டு சென்ற பின்னர் நான் காணியை விற்று, சொந்தப்பணத்தை செலவிட்டே கட்சியை நடத்துகிறேன். ஆக, வெளிநாட்டிலுள்ள 3 பேர் மாத்திரமே ரூ.50,000 வீதம் கட்சிக்கு பணம் தந்துள்ளனர்.
2004 தேர்தலில் நான் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட போது, சந்திரிகா என்னை அழைத்தார். மேசையில் ஒரு சூட்கேசை வைத்தார். “ஆனந்தசங்கரி உங்களை டிமாண்ட் பண்ண பணம் தரவில்லை. உங்கள் கஸ்டம் தெரியும். இது எமது தேர்தல் செலவுக்காக சேர்த்த பணத்தில் உங்கள் சேவைக்காக தருகிறேன்“ என்றார்.
“எனக்கு பணம் தேவைதான். ஆனால் இதை எடுக்க மாட்டேன்“ என கூறிவிட்டு வந்தேன்.
2004ஆம் ஆண்டு தேர்தலில் நான் தோல்வியடைந்து விட்டேன். சந்திரிகா என்னை அழைத்தார். “தமிழ் ஜனநாயக தலைவர் ஒருவர் பாராளுமனத்திற்கு வர வேண்டும். உங்களை தேசியப்பட்டிலில் நியமிக்கிறேன்“ என்றார். எனது நாயணத்தை இழக்க தயாராக இல்லையென கூறினேன்.
சந்திரிகா அப்படி சொன்னதன் அர்த்தம், அப்போது தேர்தலில் வெற்றியடைந்து பாராளுமன்றம் சென்ற 22 பேரும், ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்படவில்லையென்பதே.
2 வாரங்களின் பின்னர் மீள அழைத்து, பதவியேற்றுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். “நீங்களும் உங்கள் அரசியலும்“ என திட்டினார்.
இதற்கெல்லாம் தமிழ் சமூகத்தில் யாரும் என்னை பாராட்ட மாட்டார்களா?
தற்போதுள்ள அரசியல்வாதிகளில் யாராவது இப்படியொரு சம்பவம் சொல்ல முடியுமா? கோடி கோடியாக வாங்கி பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டு வருகிறார்கள்.