கனடாவில் காலிஸ்தான் போராளி கொல்லப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையின் பின்னணியில் இந்திய அரசாங்கத்திற்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த பகிரங்க குற்றச்சாட்டு “ஃபைவ் ஐஸ் பார்ட்னர்களிடையே பகிரப்பட்ட உளவுத்துறை” தகவல்களை அடிப்படையாக கொண்டது என கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன் உறுதிப்படுத்தினார்.
கனடிய ஊடகமான CTV க்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கோஹன் இதனை உறுதிப்படுத்தினார்.
“ஃபைவ் ஐஸ் கூட்டாளர்களிடையே பகிரப்பட்ட உளவுத்துறை தகவல் இருந்தது, இது பிரதமர் கூறிய அறிக்கைகளை வெளியிட கனடாவை வழிநடத்த உதவியது.” என்றார்.
கடந்த திங்களன்று கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ட்ரூடோ, ஜூன் மாதம் முக்கிய கனேடிய சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரின் மரணத்தில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக “நம்பகமான குற்றச்சாட்டுகளை” கனேடிய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்த பயங்கரவாத செயலில் இந்திய உளவுத்துறை முகவர்கள் இருப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
கனடிய பிரதமரின் கூற்று எந்த அடிப்படையிலானது என இந்திய தரப்பிலிருந்து கேள்வியெழுப்பப்பட்டிருந்த நிலையில், கனடாவுக்கான அமெரிக்க தூதர் மேலதிக விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபைவ் ஐஸ் உளவுத்துறை கூட்டாளர்கள் என்பது- அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிற்கிடையிலான உளவுத்தகவல் கூட்டு செயற்பாடாகும்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நிஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்னதாகவே பகிர்ந்து கொண்டோம். திங்கள்கிழமை வெளிப்படையாக இந்திய அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டை நான் முன்வைத்தேன். ஆனால் ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம். இந்தியாவுடன் இப்பிரச்சினையில் ஆக்கபூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போதுதான் இவ்விஷயத்தின் அடிஆழத்தை அறிய முடியும்” என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இப்பிரச்சினை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கூறுகையில், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.
முன்னதாக, இந்தியா – கனடா மோதல் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், “காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் சம்பந்தப்பட்டஇந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் சிறப்பு விலக்கு ஏதும் அளிக்கப்பட இயலாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கனடாவின் குற்றச்சாட்டுகளை உற்று கவனிக்கிறோம். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.இருப்பினும் அமைச்சர் தரப்பில் இருந்துவந்த முதல் கருத்து பிளின்கனுடையது என்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.