இலங்கைக் கடவுச்சீட்டுடன் இலங்கைப் பிரஜையை போல நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற மலேசியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
நேற்று முன்தினம் (19) அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் வந்த அதே விமானத்தில் மீண்டும் டோஹாவிற்கு நாடு கடத்தியுள்ளனர்.
அவர் 33 வயதான மலேசியர். தரகர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 10ஆம் திகதி அன்று அபுதாபியில் சந்தித்த திருகோணமலையைச் சேர்ந்த 26 வயது தமிழ் இளைஞருக்கு விமான பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.
அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை இளைஞர் அன்றைய தினம் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். பின்னர், இந்த மலேசியர் இலங்கை இளைஞரிடமிருந்து இலங்கை விமான பயணச்சீட்டு, இலங்கைக் கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
பின்னர் இலங்கைக்கு வந்து கொழும்பில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாகவும் புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று முன்தினம் (19) மாலை 04.20 மணியளவில் டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் KR-654. விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதியை அவர் செய்யப் போகும் போது அவர் மொழி பேசுவதில் ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த மலேசியரை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தினர், அவர் வந்த அதே கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் மீண்டும் டோஹாவுக்கு அழைத்துச் செல்ல விமான நிறுவனத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.