தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “ஹரக் கட்ட” எனப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவான கான்ஸ்டபிளும் அவரது மைத்துனரும் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைமறைவாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு ஒரு கோடி ரூபாவிற்கு மேல் ‘ஹரக்கட்டா’ வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட சிரேஷ்ட அதிகாரி, 20 இலட்சம் ரூபாவை அந்த கான்ஸ்டபிள் தனது மைத்துனருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
சிஐடி காவலில் இருந்து ‘ஹரக் கட்டா’வை தப்ப வைத்த பின், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவும், அதன்பின்னர் அவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு பல மாதங்களாக இந்த கான்ஸ்டபிளும் அவரது மைத்துனரும் பல உத்திகளை கையாண்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஹரக்கட்டாவை தப்புவிப்பதற்காக, அவரது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விஷம் கலந்த பால் ரொபி மற்றும் பால் தேநீர் வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் 97402 முனிபாலகே ரவிடு சந்தீப குணசேகர தற்போது காணாமல் போயுள்ளதாகவும், அவரது கையடக்கத் தொலைபேசி தொடர்பிலான விசாரணையின் அடிப்படையில் அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.
காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் மூத்த சகோதரியை மணந்த 23 வயதுடைய சந்தேக நபரும், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளும், ஹரக் கட்டாவும் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் குற்றம் புரிந்துள்ளதாகவும், அவர் அனைத்து உண்மைகளையும் மறைத்ததாகவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட அழைப்பாணை உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.மஹவத்த, திருகோணமலை, சேருநுவரவைச் சேர்ந்த வன்னியாராச்சி அமில சஞ்சீவ என்பவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.