கடந்த 15 ஆம் திகதி சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பிரதேசத்தில் தடுகங் ஓயா கரையில் நீல நிற பயணப்பையில் அடைக்கப்பட்டு, வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாரவில பிரதேசத்தில் வசிக்கும் போலி வேலைவாய்ப்பு முகவர் என குற்றம் சாட்டப்பட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் பல்வேறு நாடுகளிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பெருமளவு பணத்தை மோசடி செய்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மீது பல பொலிஸ் நிலையங்களில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெருமளவானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்க்கை நடத்தியுள்ளார்.
பயணப்பையில் அடைக்கப்பட்டிருந்த சடலத்தின் தலை மற்றும் பல இடங்களில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 2 அடி நீளமான தலைமுடியுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க உயிரிழந்த நபர், பழுப்பு நிற காற்சட்டை மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.