கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் திட்டங்கள் எல்லாம் எமது
வளங்களை அழிப்பதாகவே அமைகிறது என கிராஞ்சி, பொன்னாவெளி அனைத்து மக்கள்
ஒன்றியத் தலைவர் வள்ளிபுரம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
17.09.2023 அன்று 46 வது நாளாக பொன்னாவெளி பிரதேசத்தில்
மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வுக்கு எதிரான போராட்டத்தை
மேற்கொண்டுவரும் பிரதேச மக்கள் சார்பாக கருத்து தெரிவித்த போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்-
பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ சீமெந்து கம்பனியால் சுன்னக்கல்
அகழ்வுக்கான பூர்வாங்க வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கு கிராஞ்சி,
பொன்னாளெி கிராம மக்களாகிய நாம் எங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து
நிற்கின்றோம் அதனால்தான் இன்று 46 வது நாளாக நாம் தொடர்ச்சியான
பேராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
எங்களது கிராமங்கள் அழிக்கப்படுவதனை நாம் அனுமதிக்கமாட்டோம் மக்களின்
நலன்களுக்கு மாறான எந்த திட்டத்தையும் எமது மக்கள்ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவினால் கொண்டுவரப்படுகின்ற திட்டங்கள் எமது வளங்களை அழிப்பதாகவே நாம் கருதுகின்றோம். கடலட்டைப் பண்ணை, சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் அகழ்வு என்பன இதற்கு உதாரணங்களாகும். இதன்காரணமாகதான் மக்களாகிய நாம் இதற்கு எங்களுடைய கடும் எதிர்ப்பனை தெரிவிக்கின்றோம்.
யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து சென்றோம்
மீண்டும் சொந்த பிரதேசங்களுக்கு திரும்பி வந்தோம் ஆனால் சுன்னக்கல்
அகழ்வு இடம்பெற்றால் நாம் எங்களை ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து செல்ல
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் அவ்வாறு இடம்பெயர்ந்தால் மீண்டும் நாம்
எமது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாது அவ்வாறான ஒரு நிலைமையே ஏற்படும்
எனத் தெரிவித்த அவர், எங்களின் விருப்பத்திற்கு மாறான இத்திட்டத்தை தடுத்து நிறுத்தஅக்கறையுள்ள அனைவரும் எங்களுடன் கையோர்த்து நிற்குமாறும் கோரிக்கை
விடுத்தார்.