மன்னார், தலைமன்னாரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, படகு பழுதடைந்து தமிழகத்தில் கரையொதுங்கிய இரண்டு மீனவர்கள் வேதாரண்யம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (15) காலை 7 மணியளவில் வேதாரண்யம், கோடியாகரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த தேவசகாயம் காயுஸ் சுபத்ரன் (36), ஜோசப் நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ (37) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்-
கடந்த 12ஆம் திகதி இரவு 7 மணிக்கு தலைமன்னார் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டதாகவும், அன்றைய தினமே படகு பழுதடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். படகில் மண்ணெண்ணெய் இருந்தாலும், சிறிதளவு பெற்றோரே இருந்ததாகவும், இருந்த பெற்றோலின் மூலம் படகை இயக்கி இயக்கி கரை திரும்ப முயற்சித்ததாகவும், பெற்றோல் தீர்ந்த பின்னர், படகு தமிழக கரைக்கு அடித்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
14ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் வேதாரண்யம் செல்லக்கன்னி வாய்க்கால் பகுதியில் கரையொதுங்கியதாகவும், அங்குள்ள மீனவர்களிடம் தொலைபேசி கேட்டதாகவும், ஆனால் அவர்களிடம் தொலைபேசி இல்லையென தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர்.
அந்த மீனவர்களிடமே உணவு வாங்கி சாப்பிட்டு, அங்கேயே தங்கிவிட்டு, மக்கள் குடியிருப்பை நோக்கி இன்று காலையில் நடந்ததாக தெரிவித்தனர்.
செல்லக்கன்னி வாய்க்கால் பகுதியிலிருந்து 7 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள கோடியாகரைக்கு வந்து சேர்ந்ததும், அங்குள்ள மக்களிடம் தொலைபேசி வாங்கி, அதன்மூலம் பொலிசாருக்கு தாமே தகவல் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களில் சுபத்ரன் மீது மன்னார் நீதிமன்றத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழங்கு நிலுவையில் உள்ளதாக இலங்கை பொலிசார் மூலமாக அறிந்ததாக வேதாரண்யம் பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.