ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனான
ஹரக் கட்ட என்றழைக்கப்படும் நடுன் சிந்தக, குற்றப்புலனாய்வுத்துறையின் பிடியிலிருந்து தப்பியோடுவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள், தான் தப்பிச் சென்ற நாளிலும் அதற்கு மறுநாளிலும் சேருவில திருகோணமலையில் உள்ள தனது இல்லத்திற்கு இரண்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கான்ஸ்டபிள் தப்பிச் சென்று மூன்று நாட்கள் கடந்துவிட்டதாகவும், ஆனால் இதுவரை அவர் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வுத்துறையிலிருந்து தப்பியோடிய கான்ஸ்டபிள், அன்று இரவு வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், மறுநாள் (திங்கள்) வட்ஸ்அப் வழியாக அழைப்பு மேற்கொண்டு, எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளி நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள கட்டடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபடி கான்ஸ்டபிள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான வாயிலில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவித்தனர்.
ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை கான்ஸ்டபிளின் காதலி அறிந்திருக்கவில்லையென்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹரக் கட்டாவின் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக ஹரக் கட்டாவை சிறைக்கூண்டிலிருந்து வெளியே அழைத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் விசாரணைகள் முடியும் வரை உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்ற ஹரக் கட்டாவின் முயற்சி தோல்வியடைந்திருந்தது. ஹரக் கட்டா கழிப்பறைக்கு சென்று வரும் போது அவரது கைவிலங்கை, தற்போது தலைமறைவாக உள்ள கான்ஸ்டபிள் கழற்றி விட்டதாக நம்பப்படுகிறது.
ஹரக் கட்டாவின் தப்பியோடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்கள கட்டிடத் தொகுதிக்குள் இருந்த பாதுகாப்பு கமெரா அமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரக் கட்டா தப்பிச் செல்ல பெரும் சதி முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
rஜஐடியிலிருந்து தப்பிச்சென்ற பின்னர், ஹரக் கட்டாவும், இந்த கான்ஸ்டபிளும் படகில் ஏறி வேறு நாட்டுக்கு தப்பிச் செல்லும் திட்டம் தீட்டியதாக நம்பப்படுவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள கான்ஸ்டபிள் கைதான பின் இந்த திட்டங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்படும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஹரக் கட்டாவின் சதித்திட்டத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளோ அல்லது வேறு ஏதேனும் திணைக்களத்தினரோ உதவியிருக்கிறார்களா? இதற்காக எவ்வளவு பணம் வீசப்பட்டது? என்பது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தங்கியிருந்த காலத்தில் ஹரக் கட்டாவுக்கு விசேட கவனிப்பு அளிக்கப்பட்டுள்ளதா? வெளியில் இருந்து அவருக்கு உணவும் பானமும் கொண்டு வந்து சேர்த்தது யார்? உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன