வர்த்தகர் திலித் ஜயவீர, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தலைவராகியுள்ளார். இதையடுத்து, அவர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல ஊகங்கள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான மௌபிமா ஜனதா பக்ஷயவின் தலைவராக திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த கட்சியை அவர் வாங்கியுள்ளார். பின்னர், அதற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிர்வாக மாற்றத்துக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கார கட்சியின் சிரேஷ்ட தலைவராகவும், லசந்த விக்ரமசிங்க பொதுச் செயலாளராகவும் உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக திலித் ஜயவீர தீவிரமாக செயற்பட்டார். தனது ஊடக வலையமைப்பை பயன்படுத்தி பெருமெடுப்பிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோட்டா பாணியில் கல்விமான்களை கொண்ட அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜயவீர ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டா ஜனாதிபதி தேர்தலின் முன்னர் வியத்மக என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார். அந்த குழு யாழ்ப்பாணத்திலும் கூட்டங்கள் நடத்தியது. அப்போதைய கூட்டத்தில் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் கலந்து கொண்டிருந்தார். கோட்டாபய ஜனாதிபதியான பின்னர் சிறிசற்குணராஜா யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜயவீர சட்ட மாணவராக இருந்தபோது, டிரைட் அட்வர்டைசிங் (பிரைவேட்) லிமிடெட் என்ற விளம்பர நிறுவனத்தை நிறுவினார். 1993 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் முதல் உள்ளூர் விளம்பர வடிவமைப்பு நிறுவனமாகும்.
2005 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விளம்பர பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் முக்கியத்துவம் பெற்றது.
அதைத் தொடர்ந்து, ஜெயவீர பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்தார்.
ஜயவீரவின் தற்போதைய அரசியல் நகர்வில் கோட்டாபயவின் பங்கு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.