கஹவத்த, வெள்ளந்துர தோட்டத்தில் தமிழ் குடும்பம் வாழ்ந்த வீட்டினை கஹவத்தை பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் வெள்ளந்துர தோட்ட நிர்வாகம், காடையர்களை கொண்டு உடைத்து நொறுக்கியதையடுத்து, தோட்ட மக்கள் இது குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாளுக்கு தெரிவித்ததை அடுத்து, அவர் உடனடியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் கஹவத்தையில் அமைந்துள்ள குறித்த தோட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
தோட்ட அதிகாரியின் பங்களாவுக்கு செல்லும் பாதையை மறித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்டத்திற்கு வருவதை தெரிந்துகொண்ட குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தலைமறைவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, வெள்ளந்துர தோட்டத்திற்கு வருகை தந்த, அமைச்சருடன் மக்கள் தமக்கு நிகழ்ந்த அநியாயங்கள் குறித்து அவரிடம் எடுத்துரைத்ததுடன், இவ்விடயம் குறித்து காஹவத்தை பெருந்தோட்ட கம்பெனியின் நிறைவேற்ற அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி, குறித்த வீட்டினை அமைப்பதற்கு அனுமதியை பெற்றுக் கொடுத்ததுடன், குறித்த வீட்டுக்கு அத்துமீறி சேதங்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பணிப்புரை விடுத்தார்.
அதேவேளை, குறித்த வீட்டில் க.பொ. த உ/தர பரீட்சையில் சிறந்த சித்தியினை பெற்றுள்ள யுவதிக்கு பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமை பரிசில் ஒன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த தோட்டத்திற்கு வீடமைப்பு திட்டமொன்றினை பெற்றுக் கொடுப்பதாகவும் மக்களிடம் உரையாடும் போது உறுதியளித்தார்.
இச்சம்பவ இடத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.நிரஞ்சன் குமார், கஹவத்தை மாவட்ட தலைவர் பத்மநாதன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.