குருநாகல், கிரிபாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த மூன்று பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக வெளிநாட்டில் இருந்த அவர்களது தாய் இன்று நாடு திரும்பியுள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டினால் இந்த பெண் இலங்கை திரும்பியுள்ளார்.
குவைத்தில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வந்தபோது, தனக்கும் தனது மூன்று குழந்தைகளுக்கும் வசிக்க வீடு கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
30 வயதான இவர் தனது மூன்று குழந்தைகளை தனது தாயிடம் விட்டுவிட்டு ஒரு மாதம் பத்து நாட்களுக்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், பெண்ணின் தாயும் இந்த மூன்று குழந்தைகளையும் கைவிட்டதால், அவர்கள் தங்கள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, பாதுகாப்பற்ற தங்கள் குடிசை வீட்டில் தனித்திருந்தனர்.
14 வயதான மூத்த மகனே குடும்ப தலைவராக செயற்பட்டார்.
அந்த பிள்ளைகளின் தந்தை பிரதேசத்தில் நடந்த குற்றச்செயல் ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
3 பிள்ளைகள் தனித்திருக்கும் விவகாரம் ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து, தன்னை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம் இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்பது இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும், குறித்த பெண் வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா பணமாக வழங்கப்பட்டதாகவும் மேற்படி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண் இதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது சகோதரியுடன் சுமார் இரண்டு வருடங்கள் துப்புரவு பணியாளராக கடமையாற்றியதாகவும் இதற்கு முன்னர் இரண்டு முறை வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளதாகவும் அவருடன் விமான நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசனா பெர்னாண்டோ என்ற பெண் குவைத்திலிருந்து இன்று காலை 07:00 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.