கடந்த ஆண்டு பொதுமக்களால் தாக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்த மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி கூறுகையில், “இந்த எம்.பி.க்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. எனவே அவர்களை அமைதிப்படுத்தவே அவர்களுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை நிராகரித்துள்ளார். “தீவைப்பு தாக்குதலுக்கு உள்ளான எம்.பி.க்களால் உருவாக்கப்பட்ட சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன், தாக்குதலுக்கு ஆளான எந்தவொரு எம்.பி.க்கும் உரிமம் வழங்கப்படவில்லை என்பதை நான் தெளிவாக கூறுகிறேன்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தம்மை சபையில் பேசவிடாமல் தடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி முறையிட்டுள்ளார்.
“சபையில் பேசவிடாமல் சபாநாயகர் எங்களை ஒரு பக்கத்திலிருந்து தடுக்கிறார், அதே நேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் என்னைத் தடுக்கிறார்கள். எனவே, இந்த சூழ்நிலையில் வீட்டில் இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, ”என்று அவர் கூறினார்.