கடந்த 2011 முதல் 2020 ஆகஸ்ட் வரையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரியான சாவந்த் பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.11 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை எம்.பி., எம்எல்ஏ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை ஐஆர்எஸ் அதிகாரியான சாவந்த் தனது பதவிக் காலத்தில் முறைகேடான வழிகளில் ரூ.4.11 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக கிடைத்த பணத்தை சாவந்த் அவரது தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் டெபாசிட் செய்துள்ளார்.
சாவந்தின் ஓட்டுநர் அமலாக்கத் துறைக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், மலையாள நடிகை ஒருவர் (நவ்யா நாயர்) சாவந்தின் கட்டிடத்திலேயே வசித்து வந்ததாகவும், அவர் கேரளத்துக்கு சென்றுவிட்ட பிறகு அந்த நடிகையை சந்திக்க கொச்சிக்கு 15-20 முறை சாவந்த் சென்று வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அப்போது, அந்த மலையாள நடிகைக்கு சாவந்த் ரூ.1.75 லட்சத்தில் தங்க கொலுசை பரிசளித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதை சாவந்த் மறத்துள்ளார். நாவ்யா தனது நல்ல நண்பர் மாத்திரமே, அவருக்கு எதையும் பரிசளிக்கவில்லையென கூறியுள்ளார்.
மேலும், குருவாயூர் மற்றும் மண்ணரசலா கோவில்களுக்கு தரிசனம் செய்வதற்காக கொச்சிக்கு பலமுறை சென்றதாகவும், நாவ்யாவை சந்திக்க அல்லவென்றும் சாவந்த் கூறியுள்ளார்.
பொய் வழக்கு: சாவந்தின் வழக்கறிஞர் விக்ரம் சுதாரியா கூறுகையில், “இந்த வழக்கு நீதித் துறையின் விசாரணையின் கீழ் உள்ளது. எனது கட்சிக்காரரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் பொய்யாக சிக்கவைக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர்களுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை’’ என்றார்.
பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மும்பை ஐஆர்எஸ் அதிகாரி சாவந்த், தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.