கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மகுச்சவெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று (5) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, நிலாவெளி ஆகிய பிரதேசங்களை சார்ந்த கரையோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்மோட்டை தொடக்கம் நிலாவெளி வரையிலான கரையோர பிரதேசங்களில் கனிம மணல் அகழ்வினால் பெரும் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என அச்சம் தெரிவித்து பிரதேச மக்கள் பதாகைகள் ஏந்தி எதிர்ப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10:30 மணி அளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டமானது 11.00மணி வரை இடம்பெற்றதுடன் மக்களின் கோரிக்கைகளை மகஜராக பிரதேச செயலாளர் குணநாதன் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கையளித்தனர்.
அங்கு அகழப்படும் கனிய மணல் சீனாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்துகிறார்கள். சீன நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கினால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவர் மணல் அகழ்ந்து, கடலில் உள்ள பெரிய கப்பலில் ஏற்றுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

