மேற்கு வங்கத்தில் 68 வயது முதியவர் ஒருவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது.
சிறுமியிடம் பணம் இருப்பதை அவதானித்த பெற்றோர், அது குறித்து விசாரித்த போது, சிறுமி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வந்தது தெரிய வந்தது.
பெற்றோர் அளித்த புகாரின்பேரில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரான சீதாராம் சிங் மீது கடந்த திங்களன்று போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ‘எஃப்.ஐ.ஆர் படி, சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்ட உள்ளூர்வாசியான முதியவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு ஒவ்வொரு முறையும் சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
மேலும், ‘பாலியல் வன்கொடுமை செய்ததைப் பற்றி, வெளியில் யாரிடமாவது கூறினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன்’ எனச் சிறுமியை அவர் மிரட்டியிருக்கிறார்.
தற்போது இதில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்.