தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அயோத்தி சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அயோத்தி சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. தனது பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்கத் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் அயோத்தியில் உள்ள மடத்தில் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீயால் எரித்தும் ஆச்சார்யா சாமியார் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.